Let us Vedic priest Enter Your Home Every MonthVaithikasri February 2010  E Mail: vaithikasri@yahoo.com

பாரதக் கலாசாரத்தின் முதுகெலும்பு நமது ஆலயங்களே, நமது முன்னோர்களும் அரசர்களும், ஒவ்வொரு ஊரிலும், தான் வஸிக்கும் வீட்டைவிட மிகப்பெரிய அளவில் ஆலயத்தை அமைத்தார்கள், ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் போன்ற பழமொழிகள் ஆலயத்தின் பெருமைகளை நமக்கு உணர்த்துகின்றன,

 

ஆலயங்களில் முறையான பூஜைகள் திருவிழாக்கள் பக்தர்களின் கூட்டம் போன்றவைகள் ஆலயதெய்வ சக்தியை அதிகப்படுத்துகின்றன, தெருவின் ஒரு முனையில் விஷ்ணு ஆலயத்தையும் மற்றொரு முனையில் சிவன் ஆலயத்தையும் அமைத்து நடுவில் (அக்ரஹாரத்தில்)மக்கள் வஸித்தார்கள், ஊரின் எல்லையில் இருக்கும் ஆலயம்தெய்வம் அந்தந்த  ஊரில் வஸிக்கும் மக்களை நீர் நிலம் நெருப்பு காற்று போன்ற இயற்கையின் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கிறது, ஆகவேதான் அந்தந்த ஊரில் பிறந்தவர்களுக்கு வஸிப்பவர்களுக்கு அந்தந்த ஊர் ஆலய தெய்வங்களே குலதைவமாகக் கருதப்படுகின்றன,

 

தற்சமயம் ஆலயத்தின் பெருமைகளையும் அருட்சக்திகளையும் மக்கள் நன்கு உணரத் தொடங்கியிருக்கிறார்கள் ஆலயங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது, இது போற்றப்பட வேண்டியவைதான், இருந்தாலும் ஒவ்வோர் ஆலயத்திலும் கூடும் கூட்டத்தை கூர்ந்து கவனிக்கும்போது ஓர் விஷயம் நமக்கு புலப்படுகிறது, அதாவது  ஆலயங்களில் அந்தந்த ஊரை (பகுதியை)ச் சேர்ந்த மக்களைவிட (அருகிலுள்ள) மற்ற ஊரைச்சேர்ந்த மக்கள்தான் அதிகமாகக் காணப்படுகிறார்களோ எனத் தோன்றுகிறது,

 

அக்கரைக்கு இக்கரை பச்சை என்னும் பழமொழிக்கேற்ப நம் ஊர் ஆலயத்தை தெய்வத்தை  விட வேறு ஊரில் அமைந்திருக்கும் ஆலயத்தின் தெய்வத்தின் சக்தி அதிகம் என்னும் (ப்ராந்தியான) எண்ணமே இதற்கு முக்கியக் காரணம்,  

 

ஆலயங்களுக்குள் தெய்வங்களுக்குள் எந்த ஒரு ஏற்றத் தாழ்வுகளும்  கிடையாது என்றாலும் ஒவ்வொரு ஊர் ஆலயத்துக்கும் தெய்வத்துக்கும்  தனித் தனிப் பெருமையுண்டு, நம் ஊர் ஆலயதெய்வத்தின் அருளை நாம் அதிகம் பெற்றுள்ளோம்,

 

ஒவ்வொரு நாளும் நம்மை கவனித்து நமக்கு அருள் புரிவது நாம் வஸிக்கும் ஊரிலுள்ள ஆலய தெய்வங்களே, அன்றாடம் நமது தேவைகளை ப்ரார்த்தனைகளை நிறைவேற்றுவது (நமது முன்னோர்கள் ஆராதித்த) நம் ஊர் ஆலயதெய்வங்களே.

 

ஆகவே ஒவ்வொருவருக்கும் அவரவர் வஸிக்கும்  ஊரில் அமைந்திருக்கும் ஆலயமே தெய்வமே முதன்மையானதாக இருக்க வேண்டும், பிரார்த்தனை, அர்ச்சனை, அபிஷேகம் என நம் வழிபாடுகள் அனைத்தும் முதன் முதலில் நாம் வஸிக்கு ஊரிலுள்ள ஆலயதெய்வத்துக்குத்தான் செய்யப்பட வேண்டும், அதன் பிறகு மற்ற ஊர் ஆலய தெய்வங்களுக்கும் செய்யலாம்,

 

 நம் ஊர் ஆலயத் திருவிழாக்களுக்கு முதலில் முக்கியத்துவம் தர வேண்டும், பிறகு  மற்ற ஆலயத் திருவிழாக்களிலும் கலந்து கொள்ளலாம், இதுவே ஸரியான வழிமுறை 

 

குழந்தையும் தெய்வமும் ஒன்று, நம் ஊர் ஆலயத்தை விட்டு விட்டு மற்ற ஊர் ஆலயத்துக்குச் சென்றால் இவன் நம்மை அவமதிக்கிறனோ என்று நம் ஊர் தெய்வம் எண்ணுமாம் ஆகவே மற்ற ஊர் ஆலயங்களுக்குச் செல்லும் போதும், திவ்ய தேசங்கள் காசி ராமேஸ்வரம்  போன்ற ஊர்களுக்கு யாத்திரை செல்லும் போதும் முதன் முதலில் நாம் வஸிக்கும் ஊரிலுள்ள ஆலயம் சென்று பிரார்த்தனை செய்து கொண்டு புறப்படவேண்டும்,

 

இதனால் நம் ஊர் தெய்வத்துக்கு (நம்மை புறக்கணித்துவிட்டு இவன் செல்கிறானே) என்னும் வருத்தமும் ஏற்படாது, மாறாக நமது யாத்திரைக்கு அந்த தெய்வத்தின் அருளும் துணை புரியும், இதற்கு ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

Back